ரூ.12¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
பந்தலூர் அருகே உள்ள நம்பியார்குன்னு சோதனை சாவடியில் ரூ.12¼ லட்சம் மதுபாட்டில்களை கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பந்தலூர்,
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதை யொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள நம்பியார்குன்னு சோதனை சாவடியில் கலால்துறை உதவி ஆணையர் மணி முத்தையா தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
கண்டெய்னர் லாரி
அப்போது அந்த வழியாக ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. உடனே அதிகாரிகள் அந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதற்குள் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
உடனே அதிகாரிகள் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் அதற்கான ஆவணங்களை கேட்டார். ஆனால் ஆவணங்கள் இல்லை. அத்துடன் மைசூரில் இருந்து கோழிக்கோடு வழியாக பாலக்காடு செல்ல அனுமதி இருந்தது. ஆனால் இந்த வழியாக கொண்டு வர அனுமதி இல்லை.
மதுபாட்டில்கள் பறிமுதல்
இதையடுத்து அதிகாரிகள் அந்த மதுபாட்டில்களை கண்டெய்னர் லாரியுடன் சேர்த்து பறிமுதல் செய்தனர். அந்த மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.12¼ லட்சம் ஆகும். அவை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த மதுபாட்டில்கள் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப் பட்டதா என்பது குறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.