மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 852 பேரும், பெண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 159 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 38 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 49 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோன்று வால்பாறை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 98 ஆயிரத்து 667 பேரும், பெண்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 795 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 17 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 479 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக பொள்ளாச்சி தொகுதியில் 318 வாக்குச்சாவடிகளும், வால்பாறை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பேட் எந்திரங்கள் என்.ஜி.எம். கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை திறக்கப்பட்டது. பின்னர் முகவர்கள் முன்னிலையில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தப்பட்டது.
இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வைத்திநாதன் (பொள்ளாச்சி), துரைசாமி (வால்பாறை) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 8 பேர் போட்டியிடுகின்றனர்.
வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் என 6 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை திறக்கப்பட்டது. பின்னர் அவர்கள் முன்னிலையில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
பொள்ளாச்சி தொகுதியில் 381 வாக்குப்பதிவு எந்திரங்கள், 382 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 412 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. வால்பாறை தொகுதியில் 353 வாக்குப்பதிவு எந்திரங்களும், 353 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 392 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
வேட்பாளர்களின் பெயர், சின்னம் முகவர்கள் முன்னிலையில் பொருத்தப்பட்டது.
1000 வாக்குகள் வரை பதிவு செய்து எந்திரங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி முடிவடைந்ததும் எந்திரங்கள் மீண்டும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.
வருகிற 5-ந் தேதி மீண்டும் அறை திறக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் மூலம் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.