கேசவபுரம் கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
கம்பம் அருகேயுள்ள கேசவபுரம் கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? என்று அந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கம்பம்:
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் இருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் கேசவபுரம் கண்மாய் உள்ளது.
சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் மூலம் 104 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, சுருளிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு காரணமாக இந்த கண்மாய் விளங்கி வருகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கூத்தநாச்சி ஓடை மூலம் கேசவபுரம் கண்மாய்க்கு நீர்வரத்து உள்ளது.
பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின்பிடியில் சிக்கியுள்ளது.
இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் புளி, இலவம், மாமரங்களை சிலர் வளர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
கண்மாய் கரையோரத்தில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் மண்மேடாக மாறி வருகிறது.
இதனால் மழைக்காலங்களில் கண்மாயில் போதிய தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. தற்போது கண்மாயில் நீர்வறண்டு காணப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
எனவே வரும் காலங்களில் மழைநீரை அதிக அளவு தேக்கி வைக்க கோடைகாலத்தில் கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.