89 வாக்குச்சாவடி மையங்கள் தயார்

வால்பாறையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 89 வாக்குச் சாவடி மையங்களும் தயார் நிலையில் இருப்பதாக வால்பாறை தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜா கூறினார்

Update: 2021-03-31 05:36 GMT
தேர்தல்

வால்பாறை

வால்பாறையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 89 வாக்குச் சாவடி மையங்களும் தயார் நிலையில் இருப்பதாக வால்பாறை தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜா கூறினார்.
வால்பாறை தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜா கூறியதாவது

89 வாக்குச்சாவடி மையங்கள்


வருகிற 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வால்பாறை பகுதியில் உள்ள 89 வாக்கு சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 


இதில் சக்தி எஸ்டேட், மானாம்பள்ளி எஸ்டேட், ஹைபாரஸ்ட் எஸ்டேட் ஆகிய மூன்று எஸ்டேட் பகுதிகள் மட்டும் வனவிலங்கு தாக்குதல் உள்ள பதற்றமான வாக்கு சாவடியாக கண்டறியப்பட்டு வனத்துறையினருடன், போலீசாரும் இணைந்து வெளிமாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 


மேலும் இந்த மூன்று வாக்கு மையங்களிலும் கண்காணிப்பு வெப் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்படும்


89 வாக்கு சாவடிகளுக்கும் தேவையான மின்னனு வாக்கு எந்திரங்கள் தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு சாவடி அலுவலர்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் கொரோனா தொற்று தடுப்பு தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். கைகழுவும் கிருமி நாசினி பயன்படுத்தப்படும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். அதில் எந்த வாக்கு மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற தகவல் இருக்கும். கடந்த தேர்தலின் போது வழங்கிய தகவல் சீட்டில் புகைப்படம் இருந்தது. ஆனால் இந்த முறை வழங்கப்படவுள்ள தகவல் சீட்டில் புகைப்படம் இருக்காது.


 இந்த தகவல் சீட்டை பெற்று எந்த வாக்கு சாவடியில் வாக்களிக்க செல்ல வேண்டும் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளலாம்.வால்பாறை பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதியாக வால்பாறை பகுதியிலேயே தேர்தல் பணிவழங்கப்படவுள்ளது.

தயார் நிலை

மொத்தம் 89 வாக்கு சாவடிகளில் 428 பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். அப்பர்பாரளை மற்றும் ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் உள்ள வாக்கு சாவடி மையங்கள் மாதிரி வாக்கு சாவடி மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களும் தேர்தல் நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் செய்து தருவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


5 தேர்தல் பணிக்குழுவினர் வால்பாறை மலைப்பகுதியில் 80 வயது நிரம்பியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே வால்பாறை மலைப்பகுதியில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
---

மேலும் செய்திகள்