சிறுபான்மை இனத்தை பாதுகாப்போம் திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உறுதி
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
திருச்சி,
12-வது வார்டு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் அலங்கார குதிரைகள் அணிவகுத்து செல்ல வாக்கு சேகரிக்க சென்ற இனிகோ இருதயராஜுக்கு இஸ்லாமியர்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த அந்த பகுதியில் ஒவ்வொருவரையும் சந்திப்பதற்காக இனிகோ இருதயராஜ் ஜீப்பை விட்டு இறங்கி ஒவ்வொரு சந்துகளிலும் நடந்து சென்று அங்குள்ள இஸ்லாமிய பெண்களிடமும், ஆண்களிடமும் மறந்து விடாமல் சிறுபான்மை இனத்தை பாதுகாக்க உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களை நாங்கள் பாதுகாப்போம் சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம் என்றெல்லாம் இனிக்க இனிக்க பேசுவார்கள். ஆனால் தி.மு.க. மட்டும்தான் இஸ்லாமி யர்களுக்கு என்றும் நிரந்தர பாதுகாப்பு அரண் என்பதை மறந்து விடாதீர்கள் என்றார்.அதற்கு அவர்கள் நாங்கள் உதயசூரியனுக்கு தான் வாக்களிப்போம் என உறுதி அளித்தனர். வியாபாரிகள் பொதுமக்கள் என எல்லோரிடமும் நடந்தே சென்று வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்பாளருடன் பகுதி தி.மு.க. செயலாளர் மதிவாணன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, அலெக்ஸ் ராஜா,பாசமுள்ள பார்த்தா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,த.மு.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சென்றிருந்தனர்.