அ.தி.மு.க. ஆட்சி தொடர ‘என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்’ அறிவுடைநம்பி பிரசாரம்
அ.தி.மு.க. ஆட்சி தொடர, ‘என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்’ என தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம் செய்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர், தஞ்சை மேலவீதி, கீழவீதி, கொண்டிராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். அப்போது அவர், அ.தி.மு.க. ஆட்சியில் தஞ்சை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த துண்டுபிரசுரங்களை மக்களிடம் வழங்கினார். பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் தான் தஞ்சை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ.60 லட்சத்தில் பெரியகோவில் தேர் செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாநகராட்சி அலுவலகம், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் ஆகியவற்றிற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. மேரீஸ்கார்னரில் மேம்பாலம் கட்டப்பட்டது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.250 கோடியில் மேம்படுத்தப்பட்டு பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. 10 மெட்ரிக் டன் குளிரூட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டது. இப்படி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தஞ்சை தொகுதி வளர்ச்சி அடைந்ததே அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். தி.மு.க. ஆட்சியில் பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரிடையாக சென்று வழங்கப்படும். விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியம் வழங்கப்படும்.
அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும். மாணவர் மற்றும் பெற்றோர் நலன் காக்க கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 2 ஜி.பி. டேட்டா ஆண்டு முழுவதும் வழங்கப்படும். அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
அரசு பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உறுதியாக வழங்கப்படும். சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண் வாரிசால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதியோர், விதவைப்பெண்கள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும். எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளருடன் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, துணைச் செயலாளர் சிங்காரம், வட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தனர்.