சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2021-03-30 20:02 GMT
கடலூர், 

பாலியல் தொல்லை

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் ஜோசப் மகன் டேவிட் செல்லையா (வயது 38), தொழிலாளி. இவர் கடந்த 10.1.2020 அன்று அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் நண்பரும், அவரது மனைவியும் இல்லை. அவருடைய 13 வயது மகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்தாள்.
இதை பார்த்த டேவிட் செல்லையா, வீட்டுக்குள் நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

5 ஆண்டு சிறை

இதையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த தாயிடம், நடந்த சம்பவம் பற்றி கூறி சிறுமி கதறி அழுதுள்ளாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட டேவிட் செல்லையாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இழப்பீடு

மேலும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள் படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்