கடலூர் மாவட்டத்தில், இது வரை 67416 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் அதிகாரி தகவல்

கடலூர் மாவட்டத்தில், இது வரை 67 ஆயிரத்து 416 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2021-03-30 19:58 GMT
கடலூர், 
கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனா நோய்த்தொற்று குறைவாக இருந்தது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் முதலில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. பிறகு 80 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டது. அதன்படி தடுப்பூசி செலுத்தும்பணி நடைபெற்று வருகிறது. இதிலும் முதலில் முதியவர்கள் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் படிபடியாக தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இது ஒரு புறம் இருக்க தற்போது மாவட்டத்தில் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக 40 -யை தாண்டிய தொற்று, நேற்று முன்தினம் 57 ஆக அதிகரித்தது. இது பற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.
மாவட்டத்தில் இது வரை 67 ஆயிரத்து 416 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் தேர்தல் பணியில் ஈடுபடும் 14 ஆயிரத்து 404 பேரில் 11 ஆயிரம் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு 2300 முதல் 2500 பேர் வரை தடுப்பூசி போட்டு வருகின்றனர். 85 மையங்களில் தடுப்பூசி போடும் நடக்கிறது. ஆகவே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்