தி.மு.க.வுக்கு இந்த தேர்தலோடு முடிவு கட்ட வேண்டும்

தி.மு.க.வுக்கு இந்த தேர்தலோடு முடிவு கட்ட வேண்டும் என ராமநாதபுரத்தில் டி.டி.வி. தினகரன் கூறினார்

Update: 2021-03-30 18:39 GMT
பனைக்குளம்
தி.மு.க.வுக்கு இந்த தேர்தலோடு முடிவு கட்ட வேண்டும் என ராமநாதபுரத்தில் டி.டி.வி. தினகரன் கூறினார்.
டி.டி.வி. தினகரன்
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வ.து.ந.ஆனந்தை ஆதரித்து அந்த கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். இதைதொடர்ந்து ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் ஜி.முனியசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:- 
விவசாயிகள், அரசு ஊழியர்களுக்கு அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு தொழிற்சாலை அமைக்கவும், குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீய சக்தியையும், துரோக கட்சியையும் விரட்ட அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தி.மு.க.வுக்கு இந்த தேர்தலோடு முடிவு கட்ட வேண்டும். மாற்றத்திற்காவும், முன்னேற்றத்திற்காகவும் அ.ம.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களை திசை திருப்ப பொய்யான கருத்து கணிப்பை வெளியிடுகின்றனர். 
கடல் அட்டை
தமிழகத்தில் அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் கடல் அட்டை மீதான தடை நீக்கப்படும். வீடற்ற மீனவர்களுக்கு நீலபுரட்சி திட்டத்தின்கீழ் வீடு கட்ட ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சங்கு குளித்தல், கடல் அட்டை பிடித்தல் போன்றவற்றை நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசு அதனை தடை செய்துள்ளது. 
இதனால் 30 ஆயிரம் மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடல் அட்டை மீதான தடையை நீக்க தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்போம். கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்