கள்ளக்காதலனுடன்தான் செல்வேன் என்று அடம் பிடித்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

கள்ளக்காதலனுடன்தான் செல்வேன் என்று அடம் பிடித்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2021-03-30 18:10 GMT
அனுப்பர்பாளையம்
கள்ளக்காதலனுடன்தான்  செல்வேன் என்று அடம் பிடித்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். 
பெண் கொலை 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் வயது 35. இவருடைய மனைவி அனுசியா 25. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு மகேந்திரன் மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த பாப்பன்ன செட்டியார் வீதியில் வசித்து வந்தார். கடந்த 23ந்தேதி வீட்டில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என்று அனுப்பர்பாளையம் போலீசில் மகேந்திரன் புகார் கொடுத்தார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 15 வேலம்பாளையம் பழையகாலனியை சேர்ந்த கள்ளக்காதலன் சதீஷ்குமார்  28 என்பவருடன் இருந்த அனுசியா மற்றும் குழந்தையை மீட்டு, அறிவுரை கூறி மகேந்திரனுடன் அனுப்பி வைத்தனர். 
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 28ந்தேதி 15 வேலம்பாளையம் அம்மையப்பன்நகரில் உள்ள தோழியான சுதா வீட்டிற்கு அனுசியா தனது கணவர் மற்றும் குழந்தையை அழைத்து சென்றார். பின்னர் சுதா வீட்டில் அனுசியாவும், மகேந்திரனும் இருவரும் தனியாக பேச வேண்டும் என்று கூறி குழந்தையை சுதாவிடம் கொடுத்து வெளியே அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் அனுசியாவின் அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து சுதா உள்ளே சென்று பார்த்த போது அனுசியா கழுத்தில் துப்பட்டாவால் நெறித்தபடி மயங்கிய நிலையில் கீழே கிடந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேந்திரனிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் மகேந்திரன் அனுசியாவின் கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். 
மகேந்திரன் போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு
காதல் திருமணம்
 நானும் அனுசியாவும் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2015 ஆண்டு சொந்த ஊரான மேட்டுப்பாளையம் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு நான் எனது மனைவியை அழைத்துக் கொண்டு திருப்பூர் அங்கேரிபாளையத்திற்கு வந்தேன். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த போது எனது மனைவிக்கு சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது எனக்கு தெரிந்ததால் நான் அவளை கண்டித்தேன். இனி சதீஷ்குமாருடன் பேச மாட்டேன் என்று எனது மனைவி தெரிவித்தார். 
இந்த நிலையில் கடந்த 23ந்தேதி வீட்டில் இருந்த அனுசியாவும், குழந்தையும் திடீரென காணாமல் போய்விட்டனர். அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் இருவரையும் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைத்தனர். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் குழந்தையை விட்டு விட்டு அனுசியா சதீஷ்குமாருடன் சென்று விட்டார். நான் அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தேன். கடந்த 28ந்தேதி வேலைக்கு சென்றிருந்த நான் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை மட்டும் வீட்டில் இருந்த நிலையில் எனது மனைவியை காணவில்லை. இதையடுத்து குழந்தையை 15 வேலம்பாளையத்தில் உள்ள அனுசியாவின் தோழி சுதா வீட்டில் கொண்டு விட்டேன். 
கழுத்தை நெரித்தேன்
அப்போது அனுசியா, 15 வேலம்பாளையம்  அருகே நிற்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு போகலாம் என்று நான் அழைத்தபோது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நானும் அனுசியாவும், சுதா வீட்டிற்கு சென்றோம். அங்கு நாங்கள் இருவரும் தனியாக பேசிக் கொண்டிந்தபோது எனது மனைவி என்னுடன் வாழ மாட்டேன் என்றும், கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் செல்கிறேன் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. 
இதையடுத்து அவளை கொன்று விடலாம் என முடிவு செய்து, அவளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தேன். இதில் எனது மனைவி மயங்கி விட்டதால் எனக்கு பயம் ஏற்பட்டது. எப்படியாவது மனைவியை காப்பாற்றி விடலாம் என்று நினைத்து அனுசியாவை பெரியார்காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றேன். பின்னர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக எனது மனைவி அனுமதிக்கப்பட்டார். ஆனால் 29ந்தேதி அதிகாலை 4.30 அனுசியா இறந்து விட்டதாக டாக்டர் கூறியதால் பயந்து போன நான் அங்கிருந்து வந்து போலீசுக்கு பயந்து பல்வேறு இடங்களில் மறைந்திருந்தேன். இந்த நிலையில் அனுப்பர்பாளையம்புதூர் அருகே நின்று கொண்டிருந்தபோது போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் மகேந்திரன் கூறி உள்ளார். 
கைது செய்யப்பட்ட மகேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்காதலனும் கைது
 இந்த நிலையில் அனுசியாவின் கணவர் மகேந்திரன் மற்றும் தோழி சுதா ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக அனுசியாவின் கள்ளக்காதலன் சதீஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் கணவருடன் வாழ மறுத்து, கள்ளக்காதலனுடன் செல்வேன் என்று அடம் பிடித்த பெண்ணை அவரது கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்