விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, மயிலம் பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல்
விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, மயிலம் பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமாபிரபா தலைமையிலான அதிகாரிகள் நேற்று விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் வந்த விழுப்புரம் அருகே உள்ள தெளி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவர் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரொக்கம் வைத்திருந்தார்.
இதனை நகை வாங்குவதற்காக கொண்டு செல்வதாக கூறினார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆரோக்கியராஜ் தலைமையிலான குழுவினர் கெங்கராம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக நடந்து வந்த நல்லரசன்பேட்டையை சேர்ந்த ராகவேந்திரனிடம் சோதனை செய்ததில் அவர் ஒரு பையில் ரூ.54 ஆயிரம் வைத்திருந்தார். அந்த பணத்தை மதகடிப்பட்டு சந்தையில் இருந்து கொண்டு வருவதாக கூறினார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் அதே பகுதியில் வந்த ஒரு காரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரில் வந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த சையது உசேன் என்பவர் ரூ.64 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை தனது சொந்த உபயோத்திற்காக கொண்டு செல்வதாக அவர் கூறினார். இருப்பினு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திண்டிவனம்
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் விமல்ராஜ் தலைமையிலான குழுவினர் சந்தைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதில் வந்த அடுக்கம் பகுதியை சேர்ந்த ஜெயன் என்பவரிடம் சோதனை செய்ததில் அவர் ரூ.55,300-ஐ வைத்திருந்தார்.
இந்த பணத்தை சொந்த உபயோகத்திற்காக கொண்டு செல்வதாக கூறினார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி
மேலும் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் வரதராஜன் தலைமையிலான அதிகாரிகள், கெடார் கடைவீதி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரினுள் ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பரிசு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அந்த காரில் வந்த திருவண்ணாமலை கடம்பராயன் தெருவை சேர்ந்த சுசில்குமார் என்பவரிடம் விசாரித்ததில் தான் அடகு கடை வைத்துள்ளதாகவும், வியாபாரம் விஷயமாக கடைக்கு பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொண்டு செல்வதாகவும் கூறினார்.
இருப்பினும் அதற்கான உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மயிலம்
மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தீவனூர் வெள்ளிமேடுபேட்டை சாலை அகூரில் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் இளநிலை பொறியாளர் மகேந்திரவர்மன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வட சிறுவலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் புண்ணியகோடி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 51 ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை தாசில்தார் மோகனபிரியாவிடம் ஒப்படைத்தனர்.