குமரிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார்; என் தந்தை விட்டு சென்ற பணியை தொடர வாய்ப்பு தாருங்கள் - காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பேச்சு
குமரி மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தீட்டிய என் தந்தை விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்ய வாய்ப்பு தாருங்கள் என்று வேட்பாளர் விஜய் வசந்த் கூறினார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயகுமார் என்ற விஜய்வசந்த் போட்டியிடுகிறார். இவர் நேற்று விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேல்பாலையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் குடுக்கச்சிவிளை, ஈந்திக்காலை, அண்டுகோடு, மேல்புறம், கழுவன்திட்டை, குழித்துறை, வெட்டு வெந்நி, காப்புகாடு, மாராயபுரம், ஓச்சவிளை, முஞ்சிறை, குன்னத்தூர், தும்பாலி, ஐரேனிபுரம், சடையங்குழி, முழங்குழி, கொல்லஞ்சி, விரிகோடு, நட்டாலம், மாமூட்டுக்கடை, உண்ணாமலைக்கடை, திக்குறிச்சி, ஆலுவிளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார். அவருக்கு பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருடன் விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் விஜயதரணியும் உடன் சென்று கை சின்னத்துக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார். முன்னதாக மேல்பாலையில் விஜய்வசந்த் பேசியபோது கூறியதாவது:-
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றக்கூடிய தேர்தல் இது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த மக்கள் நலத்திட்டங்களும் வரவில்லை. பா.ஜனதாவின் மக்கள் விரோத சட்டங்களுக்கு அ.தி.மு.க. துணை போனதோடு நம்முடைய வாழ்வாதாரங்களையும் அழித்து கொண்டு இருக்கிறார்கள். வளர்ச்சிகள் எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தி உள்ளனர். எனவே அதற்கு முடிவுகட்ட மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்குகளை அளித்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
தமிழகம் எழுச்சி பெற வேண்டும். குமரி மாவட்டமும், மக்களும் எழுச்சி அடைய வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் என் தந்தை வசந்தகுமாரை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அவரது குரல் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்தது.
குமரி மாவட்டத்துக்கும், மக்களுக்கும் வளர்ச்சியை கொண்டு வர பல திட்டங்களை என் தந்தை தீட்டினார். பல அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து புதிய புதிய திட்டங்களுக்கு வழி வகுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்கி என் தந்தை உயிரிழந்தார். என் தந்தை விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் பெருவாரியாக வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அஞ்சுகிராமம் காணிமடம் யோகிராம் சூரத்குமாரின் சிஷ்யர் தபஸ்வி பொன் காமராஜை, விஜய்வசந்த் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.