கோம்பை பேரூராட்சிக்கு சீரான குடிநீர் வினியோகம் அ.தி.மு.க. வேட்பாளர் சையதுகான் உறுதி

உத்தமபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கோம்பை பேரூராட்சிக்கு சீரான குடிநீர் வினியோகம் அ.தி.மு.க. வேட்பாளர் சையதுகான் உறுதி

Update: 2021-03-30 10:11 GMT
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கோம்பை பேரூராட்சி பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் சையதுகான் உறுதி அளித்தார்.

கல்விக்கடன் ரத்து 
கம்பம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான சையதுகான் நேற்று மாலை உத்தமபாளையம் ஒன்றிய பகுதிகளான உ.அம்மாபட்டி, அம்பாசமுத்திரம், கருவேலம்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். முன்னதாக அங்கு வந்த அவருக்கு  கிராம மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் சையதுகான் பேசியதாவது:-

கிராம பகுதிகளில் வசிக்கும் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைய சுய உதவிக்குழு மூலம் வட்டியில்லா கடன் பெற்று தரப்படும். அதேபோல் விவசாயிகள் பண்ணை அமைந்து கறவை மாடுகள், கோழி வளர்ப்பதற்கு அரசு மானியத்துடன் கடன் பெற்று தரப்படும். மேலும் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

கூட்டுக்குடிநீர் திட்டத்தில்...
இன்றைக்கு எந்தவொரு மாவட்டத்திலும் இல்லாத வகையில் நமது தேனி மாவட்டத்தில் துணை முதல்&அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர முயற்சி எடுத்து பல கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக அரசு பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, கலை&அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நமது மாவட்ட மாணவர்கள் உயர்கல்வி பெற வெளிமாவட்டங்களுக்கு செல்ல தேவையில்லை. அந்த அளவுக்கு நமது மாவட்டம் கல்வியில் சிறப்பைப் பெற்றுள்ளது. 

உத்தமபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து புதிய குழாய்கள் அமைத்து கோம்பை பேரூராட்சி பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் நமது பகுதிக்கு கிடைக்க மீண்டும் அ.தி.மு.க அமைந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது கம்பம் ஜக்கையன் எம்.எல்.ஏ., உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் அழகுராஜா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன், ஊராட்சிதலைவர் கவிதா நாகராஜ், துணைத் தலைவர் செல்வம் செல்வி, கோம்பை பேரூர் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்தனர்.

மேலும் செய்திகள்