மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: செல்போன் கடைக்காரர் உள்பட 2 பேர் பலி சேந்தமங்கலம் அருகே சோகம்
மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: செல்போன் கடைக்காரர் உள்பட 2 பேர் பலி சேந்தமங்கலம் அருகே சோகம்
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் செல்போன் கடைக்காரர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாலிபர்கள்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள சாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 27). கல் உடைக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கொண்டமநாயக்கன்பட்டிக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது எதிரே முத்துகாப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். இவர் சேந்தமங்கலத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டியில் உள்ள சில்லி சிக்கன் கடை அருகே வந்தபோது 2 பேரின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விசாரணை
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரயைும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வகுமார், சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான செல்வகுமாருக்கு, சுகன்யா (25) என்ற மனைவியும், சதீஷ்குமாருக்கு, கீர்த்தனா (24) என்ற மனைவியும் உள்ளனர். மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.