அணைக்கரை பாலத்தில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை; திருவிடைமருதூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணி உறுதி

அணைக்கரை பாலத்தில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணி உறுதி அளித்தார்.

Update: 2021-03-30 04:45 GMT
யூனியன் வீரமணி பிரசாரம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் யூனியன் எஸ்.வீரமணி அணைக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அணைக்கரை கடைவீதியில் வணிகர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘ அணைக்கரை பாலத்தின் உறுதித்தன்மையை கருத்தில் கொண்டு பஸ் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது, இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். 

பொதுமக்கள் கோரிக்கை
இதனால் அப்பகுதி பொதுமக்கள் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்துள்ளனர். அணைக்கரை பாலத்தில் உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொண்டு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இங்கு இருக்கக்கூடிய மீன் சந்தை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தி தரப்படும். அணைக்கரையில் உள்ள பிரசித்திப் பெற்ற விள்ளியாண்டவர் கோவில் பல சிறப்புகளை உடையதாகும். 

சுற்றுலா தலம்
இங்கு இருக்கக்கூடிய யானை சிலை தமிழகத்திலேயே பெரிய யானை சிலையாக இருக்கிறது. பல சிறப்புகளை உடைய விள்ளியாண்டவர் கோவிலை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. ஆர்.கே. பாரதிமோகன், ஒன்றிய செயலாளர் ஆர்.கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ம.க, பா.ஜனதா, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் அணைக்கரை, உக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்