ஏரியூரில் காரில் கொண்டு சென்ற 5 பவுன், ரூ.51 ஆயிரம் பறிமுதல்
ஏரியூரில் காரில் கொண்டு சென்ற 5 பவுன், ரூ.51 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம்:
சட்டமன்ற தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை அவர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூரில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது 5 பவுன் நகை, ரூ.51 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் வந்த தர்மபுரி மாவட்டம் பாளையம் புதூரை சேர்ந்த நகை கடை உரிமையாளர் பழனிசாமியிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது பணம், நகைக்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து பணம், நகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பென்னாகரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.