கிள்ளியூர் தொகுதியில் தாலுகா தலைமை ஆஸ்பத்திரி கொண்டு வருவேன்; தேர்தல் பிரசாரத்தில் ராஜேஷ்குமார் உறுதி

கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் தாலுகா தலைமை ஆஸ்பத்திரி கொண்டு வருவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் பிரசாரம் செய்தார்.

Update: 2021-03-30 00:00 GMT
கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் ராஜேஷ்குமார் பிரசாரம் செய்தபோது
பிரசாரம்
கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ராஜேஷ்குமார் நேற்று கருங்கல் ராஜீவ் ஜங்ஷனில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் ஆர்.சி. தெரு, அணஞ்சிகோடு, உம்மளகுன்று, குழித்தோட்டம், பாலூர், திட்டவிளை, பெருமாங்குழி ஆர்.சி. ஆலயம், புல்லத்துவிளை, சுண்டவிளை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, குற்றுத்தாணி, கடமாங்குழி, நீர்வக்குளி, ஆலஞ்சி, இனிகோநகர், குறும்பனை, பொத்தையான்விளை, பரவிளை, ஆலஞ்சி ஆர்.சி.ஆலயம் போன்ற கிராம பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். 

வளர்ச்சி திட்டங்கள்
அப்போது ஆங்காங்கே பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் ராஜேஷ்குமார் பேசியதாவது:-

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். பழுதடைந்து காணப்பட்ட பல்வேறு சாலைகள் எனது முயற்சியால் சீரமைக்கப்பட்டது. மேலும் பல்வேறு குடிநீர் திட்டங்கள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள், பல்நோக்கு கட்டிடங்கள், அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடங்கள், அரசு பள்ளிகளில் மாணவ மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள், மீனவர் ஓய்வறைகள், ரேஷன் கடைகள், கடலரிப்பு தடுப்பு சுவர்கள், மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வசதியாக பல அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் விதமாக ஏராளமான இளைஞர் மன்றங்களுக்கு பல்வேறு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவி தொகை, விதவைகள் உதவி தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவி தொகை போன்ற உதவி தொகைகள் வழங்க கேட்டு தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்தி தகுதியானவர்களுக்கு உதவி தொகை கிடைத்துள்ளது. 

தாலுகா ஆஸ்பத்திரி
கருங்கல் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கனவான 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை சட்டமன்றத்தில் குரல் கொடுத்து கருங்கலில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு அமைத்து சிறுமின் விசை திட்டம் அமைத்து மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் மீண்டும் நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன் கருங்கல் பகுதியில் தீயணைப்பு நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் தாலுகா தலைமை ஆஸ்பத்திரி அமைக்கப்படும். 23 பஞ்சாயத்துக்களிலும் அரசு மினி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலப்பள்ளம், குறும்பனை, மேல குறும்பனை போன்ற பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறப்பு திட்டம் கொண்டு வந்து குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும், பல்வேறு பஞ்சாயத்துக்களில் சிதறுண்டு கிடக்கும் குறும்பனையை தனி ஊராட்சியாக அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்