மின்வாரிய ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கோத்தகிரியில் இணையதள கோளாறால் கட்டணம் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், மின் வாரிய ஊழியர்களுடன் பொதுமக்கள்வாக்குவாதம் செய்தனர்.

Update: 2021-03-29 17:55 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் ஒருசில கிராமங்களில் மின்கட்டணம் செலுத்த நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதை செலுத்த ராம்சந்த் சதுக்கம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்தனர். மேலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

வாக்குவாதம்

அப்போது திடீரென இணையதள வேகம் முற்றிலும் குறைந்தது. இதனால் அவர்களிடம் நாளைக்கு வந்து கட்டணத்தை செலுத்தி கொள்ளுங்கள் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். 

மேலும் நீண்ட தொலைவில் இருந்து வந்திருப்பதாகவும், மீண்டும் நாளை வீண் அலைச்சலை சந்திக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோளாறு

அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து இணையதள வேகம் அதிகரித்தது. தொடர்ந்து பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தை தாமதமாக செலுத்திவிட்டு சென்றனர். இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறும்போது, கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மின் அலுவலகங்களில் காலை நேரத்தில் பி.எஸ்.என்.எல். இணையதள சேவையில் கோளாறு ஏற்பட்டது. 

இதனால் மின் கட்டணம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மதியத்துக்கு மேல் மீண்டும் இணையதள சேவை சரியாக கிடைத்தது. அதன்பின்னர் மின் கட்டணம் வசூலிக்கும் நேரத்தை அதிகரித்து, அந்த பணி நடைபெற்றது என்றனர்.

மேலும் செய்திகள்