கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர ஓட்டு வேட்டை

கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்.

Update: 2021-03-29 14:47 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர ஓட்டு வேட்டையாடினார்.
அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜூ பிரசாரம்
கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று காலையில் கோவில்பட்டி அருகே கார்த்திகைபட்டிக்கு திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து குமாரபுரம் காலனி, ஊத்துப்பட்டி, கீழ தெரு, நரிக்குறவர் காலனி, ஆவல்நத்தம், நாரணபுரம், மூப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். பின்னர் மாலையில் கோவில்பட்டி லட்சுமி மில் காலனி, இந்திரா நகர், சீனிவாச நகர், அத்தைகொண்டான், இனாம் மணியாச்சி, விநாயகர் நகர், கிருஷ்ணா நகர், மந்திதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சென்று மக்களை சந்தித்து ஓட்டு வேட்டையாடினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வணிகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பொன்னாடை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.
ஊத்துப்பட்டியில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
நல்லாட்சி தொடர்ந்திட...
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் போற்றும் வகையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவியது. இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தை மிகைமின் மாநிலமாக மாற்றினார். தற்போது இந்தியாவிலேயே மின் உற்பத்தியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
அடிப்படை வசதிகள்
கோவில்பட்டி தொகுதியில் 2-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அரசு கல்லூரி மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த ஆக்கி ைமதானம் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு உள்ளது. தீப்பெட்டி உற்பத்திக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளேன். அனைத்து கிராமங்களிலும் குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளிலும் பள்ளிக்கூட வகுப்பறை கட்டிடங்கள், சமுதாய நலக்கூடம், சுகாதார வளாகம், நூலகம், பயணியர் நிழற்கூடம் போன்றவற்றை எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டி கொடுத்துள்ளேன்.
மக்களிடம் வரவேற்பு பெற்ற அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,500 உரிமைத்தொகை, வாஷிங் மெஷின், பஸ்களில் பெண்களுக்கு பாதி கட்டண சலுகை போன்றவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அ.தி.மு.க. 3-வது முறையாக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தும் உடனே நிறைவேற்றப்படும்.
மேம்பாட்டு பணிகள்
ஊத்துபட்டியில் உள்ள அரசு பள்ளிக்கூடம், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகளை செய்துள்ளேன். முன்பு ஊத்துப்பட்டியில் இருந்து மாணவ-மாணவிகள் கோவில்பட்டிக்கு சென்று படித்து வந்தனர். தற்போது ஊத்துப்பட்டியில் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டதால், மாணவ-மாணவிகள் எளதில் உயர்கல்வி பயிலும் நிலை உள்ளது. இங்குள்ள ஓடையின் குறுக்கே ரூ.1½ கோடியில் புதிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்று பல்வேறு கிராமங்களுக்கும் தேவையான நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளேன். தமிழகம் அனைத்து துறைகளிலும் சாதனைகளை புரிந்து முதன்மை மாநிலமாக உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று, கார்த்திக் பிரசாரம்
கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை ஆதரித்து, மனித உரிமை காக்கும் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.
தொடர்ந்து வானரமுட்டி, கழுகுமலை, செட்டிகுறிச்சி, நாகலாபுரம், உசிலங்குளம், அய்யனாரூத்து, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்கிறார்.

மேலும் செய்திகள்