தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்ன நிலையாகும் என்பதை எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் பிரசாரம்

முதல்-அமைச்சரின் தாயையே கொச்சைபடுத்தும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்ன நிலையாகும் என்பதை எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் பிரசாரம்.

Update: 2021-03-29 14:34 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் நேற்று வையம்பட்டி ஒன்றியப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த அரசை பொறுத்தவரை மக்களுக்கான அரசு, மக்களுக்கு என்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். 

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் என்ன என்பதை மட்டுமே நமது முதல்-அமைச்சர் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார். அதனால் தான் ஒரு பெண் கர்ப்பம் தரித்தது முதல் பிரசவித்து அந்த குழந்தை வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து திருமணம் செய்து கொடுக்கின்ற வரை எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதேபோல் முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் துயர் துடைக்கின்ற வகையில் நமது முதல்-அமைச்சர் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி தமிழகம் இன்று வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். சமீபத்தில் முதல்-அமைச்சரின் தாயை தரம் தாழ்ந்து விமர்சித்து இருக்கிறார் தி.மு.க.வை சேர்ந்த ராஜா. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே ஒரு முதல்-அமைச்சரின் தாயை இப்படி கொச்சைப்படுத்தி பேசும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்ன நிலைக்கு மக்கள் ஆளாக நேரிடும் என்பதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும். 

ஆகவே அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்திட வேண்டும். மணப்பாறை தொகுதி கடந்த இரண்டு முறை இரட்டை இலை சின்னத்திற்கு எப்படி ஒரு வெற்றியை தந்தீர்களோ, அதே போல் இந்த முறை அதை விட சிறப்பிற்குரிய வெற்றியை தர வேண்டும். அதற்கு இரட்டை சின்னத்தில் வாக்களித்திட வேண்டும் என்று கூறினார். முன்னதாக ஜல்லிக்கட்டு காளையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்