தேர்தல் பணிக்காக ரெயில் மூலம் திருச்சி வந்த துணை ராணுவப்படையினர்
தேர்தல் பணிக்காக ரெயில் மூலம் துணை ராணுவப்படையினர் திருச்சிக்கு வந்தனர்.
திருச்சி,
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இவற்றில் மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே துணை ராணுவப்படையினர் திருச்சி வந்து ஆங்காங்கே சோதனை சாவடிகளில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மேற்குவங்காளம், அசாம் மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 11 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படையினர் 800 பேர் நேற்று காலை சிறப்பு ரெயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
இவர்கள் அனைவரும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சியில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு வேன் மூலம் புறப்பட்டு சென்றனர்.