முதல்-அமைச்சர் தாயார் குறித்து அவதூறு பேச்சு: சேலத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
சேலத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
சேலம்:
முதல்-அமைச்சர் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சேலத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. போராட்டம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருவதோடு பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், முதல்-அமைச்சரை பற்றி இழிவாக பேசியதாக கூறி தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் நேற்று காலை அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவமூர்த்தி, மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ் உள்பட அ.தி.மு.க.வினர், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறி ஆ.ராசாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆ.ராசாவின் உருவ பொம்மை எரிப்பு
இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.வினர் திடீரென ஆ.ராசாவின் உருவ பொம்மையை எடுத்து வந்து அதற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக உருவ பொம்மை மீது தண்ணீர் ஊற்றி அதை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அ.தி.மு.க.வினரின் போராட்டத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார் அங்கு வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
செருப்பு மாலை
இதேபோல், முதல்-அமைச்சரின் தாயாரை அவதூறாக பேசியதாக ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து அ.தி.மு.க. சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் சேலம் 4 ரோடு பகுதியில் நேற்று காலை போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆ.ராசாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஆ.ராசாவின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், ஆ.ராசாவுக்கு கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் கொண்டு வந்தும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் பங்க் வெங்கடாசலம் தலைமையில் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி இழிவாக பேசிய தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர், இதேபோல், மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.