சேலம் மணியனூரில் 110 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

110 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

Update: 2021-03-28 22:34 GMT
சேலம்:
சேலம் மணியனூரில் 110 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
கொரோனா தொற்று
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருமண மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் முககவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க சேலம் மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு மையம்
இந்தநிலையில், மணியனூரில் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேற்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த மையத்தில் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி உள்ளவர்கள், குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்களுக்கு இம்மையத்தில் சிகிச்சை வழங்கப்படும். கூடுதல் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்.
தற்காலிக கொரோனா பாதுகாப்பு மையத்தில் அவ்வப்போது கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் பார்த்திபன், மருத்துவ அலுவலர் ரேவதி, சுகாதார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்