ஆ.ராசாவை கண்டித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம்:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை அவதூறாக பேசியதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் அம்பேத்கர், மாநகர தலைவர் நேருநகர் முருகன், மாநகர செயலாளர் சுப்ரமணி, மாவட்ட மகளிர் அணி தலைவி நவமணி, கலைச்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், ஆ.ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி., மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆ.ராசாவை கண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.