வள்ளியூர் சித்தூர் தென்கரை மகாராஜேசுவரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்
வள்ளியூர் சித்தூர் தென்கரை மகாராஜேசுவரர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தது.
வள்ளியூர், மார்ச்:
வள்ளியூர் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனி திருவிழா
வள்ளியூர் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் முக்கிய திருவிழாக்களில் பங்குனி மாதம் நடக்கும் உத்திர திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா இந்தாண்டு கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேக பூஜை, மதியம் கும்பாபிஷேக தீபாராதனை, சிறப்பு பூஜை, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம்
9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 11.10 மணிக்கு தென்கரை மகாராஜேஸ்வரர் சுவாமி தேரில் எழுந்தருளினார். பின்பு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடந்தது. இதில் தென்மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சாஸ்தா கோவிலில் பக்தர்கள் ஒன்று கூடி வடம்பிடித்து தேரோட்டம் நடப்பது நெல்லை மாவட்டம் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவிலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.