மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்
பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோபாலா... கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பெரம்பலூர்:
தேரோட்டம்
பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் இரவில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் கடந்த 26-ந்தேதி விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் வெண்ணெய்த்தாழி உற்சவமும், இரவில் குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் ரதாரோகன நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு நிலையில் இருந்து தேரை வடம்பிடித்தலும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோபாலா... கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் தெற்குத்தெரு வழியாக சென்று மதியம் பழைய நகராட்சி அலுவலக மூலையில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலையில் மீண்டும் கடைவீதி, சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக தேர் இழுத்து வரப்பட்டு நிலையில் நிறுத்தப்பட்டது. அதன்பின் தீர்த்தவாரி, வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
தேரோட்டத்தில் கோவில் செயல் அலுவலர் அனிதா, கோவில் திருப்பணிக்குழு பொருளாளர் ராமலிங்கம் செட்டியார், கோவில் பரம்பரை ஸ்தானிகர் பொன்.நாராயணஅய்யர், முன்னாள் அறங்காவலர்கள் தெ.பெ.வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், ஆடிப்பெருக்கு ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி தலைவர் கீற்றுக்கடை குமார், தம்பு காபி பார் மற்றும் கோபாலன் பால் நிலைய உரிமையாளர் பாலாஜி, ஜி.கே. கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.கண்ணன், அனைத்து நகை வியாபாரிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் அரசி ராஜசேகரன், தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர். பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்று ேதரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை துவாதச ஆராதனம், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சிகளும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை ஸ்நபன திருமஞ்சனமும், இரவு புன்னைமர வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை மறுநாள் காலை மட்டையடி, இரவில் ஊஞ்சல் உற்சவமும், வருகிற 1-ந்தேதி காலை மஞ்சள்நீர், இரவு விடையாற்றி விழாவும், 4-ந்தேதி திருத்தேர் 8-ம் திருவிழாவும ்நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமும், இரவில் பெருமாள் ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.