முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

ஊட்டி, கூடலூரில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

Update: 2021-03-28 19:08 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஊட்டியில் உள்ள எல்க்ஹில் முருகன் கோவிலில் நேற்று காலை 8 மணிக்கு 108 கலச அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 11.55 மணிக்கு சிகர நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து ரோஜா பூங்கா சந்திப்பு, ஏ.டி.சி., கமர்சியல் சாலை, மணிக்கூண்டு, லோயர் பஜார், ராஜீவ்காந்தி ரவுண்டானா, மெயின் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்று கோவிலை வந்தடைந்தது.

முன்னதாக தேரில் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கொரோனா பரவல் காரணமாக குறைந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நிறுத்தப்பட்டு இருந்தது.

சந்தனமலை 

கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கூடலூர் அருகே சந்தன மலை முருகன் கோவிலில் கடந்த 26-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து முருகப்பெருமானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

காலை 11 மணிக்கு சேரன் நகர் ஆற்றங்கரையில் இருந்து காவடிகள், பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இரவு 7 மணிக்கு விளக்கு பூஜையும், 8 மணிக்கு வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மஞ்சள் நீராட்டு விழா

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் விசேஷ ஹோமங்கள், அலங்கார சிறப்பு பூஜைகள் இரவு வரை நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு முருகப்பெருமானின் திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக கோவில் வளாகத்தில் அதிகளவில் கடைகள் செயல்படுவதற்கு அதிகாரிகள், போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோன்று கூடலூர் 1-ம் மைல், பந்தலூர், உப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

வெற்றிவேல் முருகன்

கோத்தகிரி சக்திமலையில் உள்ள பழமை வாய்ந்த வெற்றிவேல் முருகன் கோவிலில் நேற்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. காலை 10 மணிக்கு ஸ்கந்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மதியம் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், முருகப்பெருமான் வீற்றிருந்து, கோவிலை 3 முறை வலம் வரும் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 

பக்தர்கள் சப்பரத்தை தோளில் சுமந்தவாறு, முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களுடன் கோவிலை வலம் வந்தனர். இதையடுத்து முருகப்பெருமானுக்கு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்