தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2021-03-28 19:04 GMT
தர்மபுரி,

தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாலுக்கிராமம் அழைத்தல், புற்று மண் எடுத்தல் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாக்கள் நடைபெற்றன. 

பின்னர் பால்குட ஊர்வலம் மற்றும் சாமி திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி காலை பெண்கள் மட்டும் வடம்பிடிக்கும் தேரோட்டமும், மாலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டமும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) வேடர்பறி உற்சவமும், நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. வருகிற 31-ந் தேதி சயன உற்சவமும், வருகிற 1-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் விமலா, ஆய்வாளர் சங்கர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்