அரூரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினரான ஆசிரியர் வீட்டில் ரூ.16½ லட்சம் பறிமுதல்

அரூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அ.தி.மு.க. பிரமுகரின் உறவினரான ஆசிரியர் வீட்டில் இருந்து ரூ.16½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-28 18:56 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க. நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார். இவர் மாம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் பசுபதி. இவர் அரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். மேலும் அரசு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் ஆசிரியர் குமார் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் குமார் வீட்டுக்கு சென்று திடீரென சோதனை செய்தனர். இந்த சோதனை  நள்ளிரவை தாண்டியும் நடந்தது. குமார் வீட்டில் ஒவ்வொரு அறைகள் மற்றும் மாடியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கட்டுக்கட்டாக பணம்

மேலும் குமார் வீட்டிற்கு வெளியே போலீசார் பாதுகாப்புக்கு நின்று கொண்டு இருந்தனர். இதனிடையே நேற்று அதிகாலை 3 மணி அளவில் அ.தி.மு.க. பிரமுகர் பசுபதியின் உதவியாளர் நேதாஜி என்பவர் ஆசிரியர் குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது குமார், வீட்டில் இருந்த ஒரு பையை எடுத்து வெளியே வீசினார். அதை வீட்டுக்கு வெளியே நின்றிருந்த நேதாஜி எடுத்து செல்ல முயன்றார்.

இதைப்பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வீட்டில் சோதனை நடத்தி கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஸ்வநாதனிடம் போலீசார், பையுடன் பணத்தை ஒப்படைத்தனர். அந்த பையில் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

4 பேர் மீது வழக்கு

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, அரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்தையனிடம் ஒப்படைத்தனர். மேலும் நேதாஜியை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் சிக்கியது தொடர்பாக ஆசிரியர் குமார், நேதாஜி, டாக்டர் சரவணன் உள்பட 4 பேர் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரூரில் அ.தி.மு.க. பிரமுகரின் உறவினரான ஆசிரியர் வீட்டில் ரூ.16½ லட்சம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்