தி.மு.க.வை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை முதல்அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பதில்
தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள். தி.மு.க.வை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை என்று காங்கேயத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்அமைச்சருக்கு பதில் கூறினார்.
திருப்பூர்
தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள். தி.மு.க.வை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை என்று காங்கேயத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்அமைச்சருக்கு பதில் கூறினார்.
உங்களோடு இருப்பவன்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று காலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரவுண்டானா பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் மு.பெ.சாமிநாதன், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் கயல்விழி, பல்லடம் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் முத்துரத்தினம் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது
நல்ல மனிதர்
முதல்அமைச்சராக இருக்கக்கூடிய பழனிசாமி, தோல்வி பயத்தில் உளற ஆரம்பித்து விட்டார். வாய்க்கு வந்தபடி பேச தொடங்கிவிட்டார். கடைசி நேரத்தில் புலம்ப ஆரம்பித்து விட்டார். தி.மு.க.வை வீழ்த்துவதற்கு என்னையே பலியிட தயார் என்று பழனிசாமி பேசியுள்ளார். அவரை பாராட்டுகிறேன். ஏனென்றால் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட ஒரே பெரிய மனிதர் பழனிசாமி தான். நல்ல மனிதர்.
தி.மு.க.வை அழிக்க போகிறேன் என்று பழனிசாமி கூறுகிறார். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனரே தவிர தி.மு.க. அழிந்ததாக வரலாறு இல்லை. தி.மு.க.வை வீழ்த்தவும் முடியாது. அதை நினைத்து கூட பார்க்க முடியாது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. இனியும் யாரும் பிறக்கவும் முடியாது. தி.மு.க. என்பது தனிப்பட்ட ஸ்டாலின் இல்லை. சென்னை முதல் குமரிவரை இருக்கக்கூடிய லட்சோப லட்சம் ஸ்டாலினை கொண்ட இயக்கம் தான் தி.மு.க., கருணாநிதிக்கு நான் மட்டும் மகன் அல்ல. இந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உடன்பிறப்பும் கருணாநிதியின் மகன் தான்.
தி.மு.க. வளரும்
அண்ணா காலத்தில் இருந்து பார்த்து வருகிறோம். பல சுள்ளான்கள், பல அயோக்கியர்கள் தி.மு.க.வை வீழ்த்தப்போகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள். எனவே முதல்-அமைச்சர் பழனிசாமி கூறும் வசனத்தை கடந்த 50 ஆண்டுகாலமாக நாம் கேட்டு, கேட்டு புளித்து விட்டது. அவர்கள் ஆசை எல்லாம் நப்பாசை தான். அரைக்க, அரைக்கத்தான் சந்தனம் மணம் தரும். வெட்ட, வெட்டத்தான் மரம் தளைக்கும். தி.மு.க.வுக்கு எதிர்ப்பு வரவர தான் தி.மு.க. வளரும். இந்த அரசியல் உண்மையை பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.
மத்தியில் ஆளும்கட்சி இல்லை. மாநிலத்தில் நாம் ஆளும் கட்சி இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சியை வீழ்த்த எத்தனை பேர் கூடியிருக்கிறார்கள். அப்படி என்றால் நம் கட்சி எப்படி இருக்கிறது. நம்மை சுலபமாக நினைத்து விட்டார்கள். கருணாநிதி இல்லை, அதனால் தி.மு.க.வை வீழ்த்தலாம் என்று நினைக்கிறார்கள். அட முட்டாள்களே, பைத்தியக்காரர்களே, கருணாநிதி சென்றாலும் கருணாநிதியின் உடன்பிறப்புக்கள் இருக்கிறார்கள். எங்களைப்போன்றவர்களின் உள்ளங்களில் கருணாநிதி என்றைக்கும் வாழ்ந்து வருகிறார். இன்றைக்கு இந்த களத்தில் நிற்பது கருணாநிதியும், உதயசூரியனும் தான். 234 தொகுதிகளிலும் நிற்பது இந்த ஸ்டாலின் தான். இந்த பாசம், நேசம், ஒற்றுமையால் தான் குடும்ப பாங்கோடு நாம் இருக்கிறோம்.
உயிரை தர வேண்டிய அவசியம் இல்லை
1949ம் அண்டு செப்டம்பர் மாதம் 17ந் தேதி ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தி.மு.க. தொடங்கப்பட்டது. அண்ணா தொடங்கி வைத்தபோது அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் பெத்தாம்பாளையம் பழனிசாமி. அப்படிப்பட்ட தி.மு.க.வை வீழ்த்த எத்தனை துரோக சக்தி வந்தாலும் இந்த இயக்கத்தை எவனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. தி.மு.க.வை வீழ்த்த உங்கள் உயிரை தர வேண்டிய அவசியம் இல்லை முதல்-அமைச்சர் பழனிசாமி. நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும். விரைவில் ஆட்சியை பிடித்து தி.மு.க. ஆளப்போகிற காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும். அதைத்தான் கூட்டத்தின் மூலமாக பழனிசாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
பழனிசாமி முதல்அமைச்சராக மட்டுமில்லாமல் பொதுப்பணித்துறையின் பொறுப்பும் அவரிடம் இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை அவர் கையில் தான் உள்ளது. அதையெல்லாம் பயன்படுத்தி கொள்ளையடித்து வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குறிப்பாக நீர்பாசனத்துறையை தனியாக பிரித்து தனி அமைச்சகம் உருவாக்கப்படும். நீர்மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும். முதல்அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் ரூ.10 ஆயிரம் கோடியில் ஏரி, குளங்களை பாதுகாத்து நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.2 ஆயிரம் கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும். கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட காவிரிகுண்டாறு இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். தாமிரபரண-நம்பியாறுருமேணியாறு திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் 40 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் வகையில் கன்னிகா மதகு கால்வாய் சீரமைக்கப்படும்.
நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம்
காவிரி, வைகை, தாமிரபரணி ஆற்றின் கரைகள் மேம்படுத்தப்படும். நீர் நிலைகளில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும். மழைக்கால சிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும். தமிழ்நாடு நிலத்தடிநீர் பாதுகாப்பு சட்டம் புதிதாக நிறைவேற்றப்படும். நீர்வரத்தை உறுதி செய்ய நீர்வழித்தடங்கள் சீரமைக்கப்படும். நீர்ப்பாதைகள் கணக்கிடப்பட்டு அவற்றை மேலாண்மை செய்ய அரசு முயற்சி மேற்கொள்ளும்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். இந்திய நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். தென்னக நதிகளை தமிழக அரசு சார்பில் இணைக்கப்படும். இதை செயல்படுத்தக்கூடிய அரசாக உங்களால் அமையக்கூடிய தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி தருவோம் என்று உறுதி கூறுகிறேன்.
கருத்துக்கணிப்பு
234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறப்போகிறது. இதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றேன். அதற்கு பிறகு வரும் கருத்துக்கணிப்பில் எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது என்று சொல்கிறார்கள். கருணாநிதி அடிக்கடி சொல்வதைப்போல் கருத்துக்கணிப்பு சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் நமது பணியை செய்ய வேண்டும். நாம் ஏமாந்துவிடக்கூடாது என்று எச்சரிப்பார். நானும் அதையே உங்களிடம் கூறுகிறேன்.
கருத்துக்கணிப்பை நம்பி நாம் ஓய்வு எடுத்துவிடக்கூடாது. கடைசி ஓட்டை வாக்குச்சாவடியில் பதிய வைக்கும் வரை நமது பணி ஓயாது என்று பணியாற்ற வேண்டும். அந்த பணியை செய்து விட்டால் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா, அ.தி.மு.க. ஜெயிக்காது. பா.ஜனதா கட்டாயம் வரப்போவது இல்லை. எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் வரப்போவதில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பார்த்தோம். வாஷ்அவுட்.
அ.தி.மு.க. வரக்கூடாது
அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் வந்துவிடக்கூடாது. 234 தொகுதிகளிலும் ஏன் ஒரு இடத்தில் கூட வரக்கூடாது என்ற ஆசை என என்னிடம் கேட்கலாம். வரவே கூடாது. ஒரு இடத்தில் அ.தி.மு.க. வந்தாலும் அவர்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கமாட்டார்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ.வாகத்தான் இருப்பார்கள்.
ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். பா.ஜனதா எம்.பியாக அவர் இருக்கிறார். அவருடைய லெட்டர்பேடில் கட்சியின் தலைவர் படம் போடுவது வழக்கம். அவருடைய லெட்டர்பேடில் மோடி படத்தையே போட்டுள்ளார். அதனால் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயித்தாலும் அவர்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தான். அதனால் சுத்தமாக நிறுத்தியாக வேண்டும். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.
விவசாய கடன் தள்ளுபடி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை 505 வாக்குறுதிகளாக தெரிவித்துள்ளோம். விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. ஆட்சி வந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். வேளாண்துறைக்கு தனி பட்ஜெட், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
அனைத்து உணவுப்பொருட்களும் குறைந்தபட்ச ஆதாரவிலை. நம்மாழ்வார் பெயரில் இயற்கை விவசாய ஆராய்ச்சி மையம், மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மும்முனை மின்இணைப்பு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாயகடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி செய்யப்படும்.
கொரோனா கால நிவாரணம்
குடும்பத்தலைவிக்கு ரூ.1,000 உரிமத்தொகை வழங்கப்படும். மகளிருக்கு உள்ளூர் டவுன் பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய முடியும். அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் என்பதை 40 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பால் விலை குறைப்பு, மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி, அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இடம் தமிழக இளைஞர்களை கொண்டு நிரப்பப்படும். சாலைப்பணியாளர்கள் நியமனம், திருக்கோவில் பணியாளர் நியமனம், மக்கள் நலப்பணியாளர் நியமனம் செய்யப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் ரூ.1000 மட்டுமே அ.தி.மு.க. அரசு வழங்கியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீதம் உள்ள ரூ.4 ஆயிரத்தை, வருகிற ஜூன் மாதம் 3ந் தேதி கருணாநிதியின் பிறந்தநாளன்று வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
தாசில்தார் அலுவலகம்
தாராபுரம், காங்கேயத்தில் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். பல்லடத்தில் குளிர்பதன கிடங்கு, கோழிகள் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும். பல்லடம், காங்கேயத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் கட்டப்படும். காங்கேயம் காளை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். பல்லடம் பகுதியில் உள்ள குளங்களை நிரப்புவதற்கு நொய்யல் ஆற்றில் இருந்து உபரிநீர் கொண்டு வர ஆய்வு மேற்கொள்ளப்படும். காங்கேயம், வெள்ளகோவில், பல்லடத்தில் சுற்றுச்சாலை அமைக்கப்படும்.
வெள்ளகோவில், நாகமநாயக்கன்பட்டியில் உள்ள அமராவதி மற்றும் பி.ஏ.பி. உபரிநீரை வட்டமலைக்கரை அணைக்கு கொண்டு வரப்படும். மாவட்டம் முழுவதும் நீர்வழிப்பாதையில் தடுப்பணைகள் கட்டப்படும். ஆனைமலையாறநல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். அத்திக்கடவுஅவினாசி திட்டத்தை விரிவுபடுத்தி காங்கேயம் ஒன்றியத்தில் கீரணூர், கணபதிபாளையம், தம்பிரெட்டிப்பாளையம், சிவன்மலை, பாலசமுத்திரம் புதூர் ஆகிய ஊர்களில் நிலத்தடி நீர் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளகோவிலை தலைமையிடமாக கொண்டு தாசில்தார் அலுவலகம் அமைக்கப்படும்.
சுயமரியாதை
முதல்அமைச்சர் வேட்பாளரான எனக்கும் ஓட்டுக்கேட்டு இங்கு வந்துள்ளேன். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு மட்டுமில்லாமல் நீட் நுழைவு, இந்தி திணிப்பு, சமஸ்கிருதத்துக்கு வரவேற்பு, தமிழ் மொழிக்கு ஆபத்து ஆகியவற்றை உருவாக்கி உள்ளது. மாநில உரிமை பறிபோய் வருகிறது. சுயமரியாதையை இழந்து வருகிறோம். இது திராவிட மண். தமிழகத்தை மீட்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.