குன்னூர் ஏல மையத்தில் ரூ.12 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை

குன்னூர் ஏல மையத்தில் ரூ.12 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-03-28 17:54 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கடந்த 25, 26-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு(விற்பனை எண்-12) 12 லட்சத்து 36 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது.

அதில் 9 லட்சத்து 21 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 3 லட்சத்து 15 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 9 லட்சத்து 76 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.12 கோடியே 9 லட்சம் ஆகும். இது 80 சதவீத விற்பனை. ஆனால் விலையில் மாற்றம் இ்ல்லை. கடந்த வார விலையிலேயே ஏலம் போனது.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.329, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.350 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.103 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.162 முதல் ரூ.202 வரை ஏலம் போனது. 

டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.110 முதல் ரூ.115 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.160 முதல் ரூ.276 வரையும் விற்பனையானது. அடுத்த ஏலம்(விற்பனை எண்-13) வருகிற 1, 2-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 14 லட்சத்து 89 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்