கிறிஸ்தவர்கள் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், ஐக்கிய கிறிஸ்தவ சபை சார்பில் நேற்று குருத்தோலை பவனி நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் குருத்தோலை பவனியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலய தலைமை போதகர் டேவிட்சன் பால் ஜேக்கப் தொடக்க ஜெபம் செய்தார். திண்டுக்கல் டி.இ.எல்.சி. தேவாலய தலைமை குரு காருண்யா சாந்தசீலன் நற்செய்தி வாசகம் வாசித்தார். அதன் பிறகு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி குருத்து ஞாயிறு செய்தி வழங்கி, குருத்தோலைகளை அர்ச்சித்து பவனியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு கைகளில் குருத்தோலையை பிடித்தபடி ஓசன்னா பாடல்களை பாடி வலம் வந்தனர். இந்த குருத்தோலை பவனி ஆர்.எஸ்.ரோடு வழியாக சென்று அந்தந்த தேவாலயங்களை அடைந்தது. அதன் பிறகு அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, குமரன் திருநகர், என்.ஜி.ஓ. காலனி உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளிலும் அந்தந்த பங்கு தந்தையர்கள் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்
கொடைக்கானலில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதற்காக அண்ணாசாலையில் உள்ள சி.எஸ்.ஐ. புத்தக நிலையம் முன் கொடைக்கானல் வட்டார அதிபர் பங்கு தந்தை எட்வின் சகாயராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
பின்னர் அங்கிருந்து குருத்தோலை பவனி தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலையுடன் ஓசன்னா பாடல்களை பாடி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இதில் மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்திற்கு ஒரு குழுவினரும், மற்றொரு பிரிவினர் சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கும், இன்னொரு பிரிவினர் சலேத் அன்னை ஆலயத்திற்கும் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். இதைத்தொடர்ந்து நகரில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது.
செந்துறை
செந்துறை புனித சூசையப்பர் ஆலயம் சார்பில் குருத்ேதாலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் மங்களபட்டி பிரிவிலிருந்து தொடங்கி சந்தைப்பேட்டை, குரும்பப்பட்டி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. செந்துறை பங்கு தந்தையர்கள் ஆரோக்கியம், பிரிட்டோ ஆகியோர் கூட்டு திருப்பலி நடத்தினார். திருப்பலி முடிந்த பின்பு அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.