என் உயிரை காப்பாற்ற பிரார்த்தனை செய்த நன்னிலம் தொகுதி மக்கள், என்னை மீண்டும் தேர்வு செய்வார்கள் அமைச்சர் ஆர்.காமராஜ் சிறப்பு பேட்டி
என் உயிரை காப்பாற்ற பிரார்த்தனை செய்த நன்னிலம் தொகுதி மக்களின் என்னை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
கொரடாச்சேரி,
நன்னிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக அமைச்சர் ஆர்.காமராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அவரை ‘தினத்தந்தி’ சார்பில் சந்தித்து சிறப்பு பேட்டி கண்டோம். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும். அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: நன்னிலம் சட்டசபை தொகுதியில் இதுவரை செய்துள்ள பணிகள் என்ன?
பதில்: நான் நன்னிலம் சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போது இத்தொகுதி ஒரு பின்தங்கிய தொகுதியாக இருந்தது. போதுமான சாலை வசதி இல்லை. ஆற்றைக் கடந்து செல்ல பாலங்கள் இல்லை. கல்லூரி படிப்பிற்கு தொலைதூரம் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. நான் சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபின் கடந்த பத்தாண்டுகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.215 கோடி மதிப்பில் சாலைகளும், ரூ24.46 கோடி மதிப்பில் பாலங்களும் கட்டப்பட்டுள்ளது. அதுபோல் ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.210 கோடி மதிப்பில் சாலைகளும் ரூ55 கோடி மதிப்பில் பாலங்களும் கட்டப்பட்டு சீரான போக்குவரத்து நடந்து வருகிறது.
நன்னிலம் மற்றும் குடவாசலில் அரசு கலைக்கல்லூரி, வலங்கைமானில் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தொகுதிக்குட்பட்ட நன்னிலம் வட்டாரத்தில் 8 இடங்களிலும், குடவாசல் வட்டாரத்தில் 7 இடங்களிலும், வலங்கைமான் வட்டாரத்தில் 7 இடங்களிலும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
குடவாசலில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு, நன்னிலம் முடிகொண்டானில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. நன்னிலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 53 இடங்களில் ரூ.17.5 கோடி மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நன்னிலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், வலங்கைமானில் தாசில்தார் அலுவலக கட்டிடம், வலங்கைமான் மற்றும் குடவாசலில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டடங்கள், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் மற்றும் பேரளத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுதி கட்டடங்கள், நன்னிலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சீர்மிகு பணிகளால் இத்தொகுதி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளது. 10 ஆண்டுகளில் செய்துள்ள பணிகளையெல்லாம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆதரவு தந்து வருகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இந்த வளர்ச்சி பயணம் தொடரும்.
கேள்வி:- நன்னிலம் சட்டசபை தொகுதிக்கு செய்த பணிகளில் மிக முக்கியமான பணியாக தாங்கள் கருதுவது எது?
பதில்:- இத்தொகுதியில் பல்வேறு பணிகள் நடந்து இருந்தாலும் என் மனதிற்கு நிறைவான பணியாக கல்லூரி அமைக்கப்பட்டதை கருதுகிறேன். நான் சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன் அம்மாவிடம் இதனை கோரிக்கையாக வைத்து, அம்மாவின் அனுமதியின் பேரில் நன்னிலத்தில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. இன்று நன்னிலம், குடவாசல் ஆகிய இரு இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. வலங்கைமானில் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகள் மூலம் ஒரு ஆண்டிற்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து பட்டதாரியாகி வெளியே வருகிறார்கள். இது என் மனதிற்கு நிறைவான பணியாக கருதுகிறேன்.
கேள்வி:- தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் எப்படி?
பதில்:- உணவுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறையாகும். ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருள்கள் வினியோகம் செய்யக்கூடிய முக்கியமான பணி இத்துறை மூலம் நடைபெறுகிறது. இத்துறையில் 9½ ஆண்டு காலம் மக்களிடத்தில் குறைகள் ஏற்படாத வகையில் பணியாற்றியுள்ளேன். இத்துறையின் செம்மையான பணிகளை பாராட்டி மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. நீண்ட காலம் தொடர்ந்து இத்துறை அமைச்சராக பணியாற்றியவன் என என்னால் பெருமையுடன் கூற முடியும். நான் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் உணவு உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கேள்வி:- இந்த தேர்தலில் எதனை முன்வைத்து பிரசாரம் செய்கிறீர்கள்?
பதில்:- கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மா கிளினிக் போன்ற புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2500 வழங்கியதையும், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு விவசாயம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இவைகளை முன்வைத்து எங்களுடைய தேர்தல் பிரச்சாரம் அமைந்துள்ளது.
கேள்வி: தங்களின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதுவரை செய்த சாதனைகள் மக்களின் மனதை விட்டு நீங்கவில்லை. கொரோனா தொற்று காலத்தில் மக்களை பாதுகாக்கும் பணியில் இடைவிடாது ஈடுபட்டதன் மூலம் எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பாதிப்பினால் எனது உடல்நிலை கவலைக்கிடமானது. நன்னிலம் தொகுதி மக்கள் எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களது பிரார்த்தனையால் நான் மறுபிறவி எடுத்து அவர்களின் முன் வேட்பாளராக நிற்கிறேன். என்மீது அன்பு கொண்டு, பிரார்த்தனையால் எனது உயிரை மீட்டுத்தந்த நன்னிலம் தொகுதி மக்கள், மீண்டும் நான் வெற்றிபெற்று தங்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறார்கள். என்னை வெற்றிபெறச் செய்வார்கள்.