வாக்குறுதிகளை நிறைவேற்றி கரூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன்; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

வாக்குறுதிகளை நிறைவேற்றி கரூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2021-03-28 05:30 GMT
அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டபோது
வாக்குசேகரிப்பு
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று கரூர் தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர், வெங்கடேஸ்வரா நகர், சுங்ககேட் மேல்புறம், சிவசக்தி நகர், கங்கா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

அப்போது அவர் பேசியதாவது:- 
வருகிற 6-ந்தேதி நடைபெற கூடிய சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் 2-வது முறையாக கரூர் தொகுதியில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன். ஜெயலலிதாவின் அரசு, கடந்த 10 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுடைய முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை வழங்கி உள்ளது. உலகையே புரட்டி போட்ட காலத்தில், இந்தியாவிலேயே கொரோனா வைரசை கட்டுக்குள் வைத்திருக்கிற மாநிலம் என்ற பாராட்டை பெற்ற மாநிலம் தமிழகம்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கியாஸ் விலை ஏறிக்கொண்டே செல்கிறது என்று அரசியல் செய்து கொண்டு வந்தார். தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். 

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன்
அதேபோல அனைவருக்கும் வாஷிங்மெஷின், சோலார் அடுப்பு வழங்கப்படும். தேர்தல் வாக்குறுதி கொடுத்தல் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என அ.தி.மு.க. மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றி கரூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன். ஆனால் தி.மு.க. அப்படியல்ல, ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை எல்லாம் கொடுப்பார்கள். ஆனால் எதையும் நிறைவேற்றமாட்டார்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்