மீண்டும் என்னை வெற்றி பெற செய்தால் கொள்ளிடத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா கொண்டுவர பாடுபடுவேன்; அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி வாக்குறுதி

மீண்டும் என்னை வெற்றி பெற செய்தால் கொள்ளிடத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா கொண்டுவர பாடுபடுவேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி வாக்குறுதி அளித்துள்ளார்.

Update: 2021-03-28 03:30 GMT
வாக்கு சேகரிப்பு சீர்காழி தொகுதி 
அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி. பாரதி நேற்று திருவெண்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  முன்னதாக திருவெண்காடு விநாயகர் கோவிலில் வழிபட்டார். பின்னர் அவருக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் நான் சீர்காழி புத்தூர் பகுதியில் அரசினர் கலைக்கல்லூரி கொண்டு வந்தேன். மேலும் தர்காஸ், திருநகரி, தென்னம்பட்டினம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 
உப்பனாறு நடுவே தடுப்பணை கட்ட ஏற்பாடு செய்துள்ளேன். 

தீயணைப்பு நிலையம்
சீர்காழியை தலைமை இடமாக கொண்டு வருவாய் கோட்டம் அமைக்க ஏற்பாடு செய்தேன். சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளேன். தொகுதி முழுவதும் மேம்படுத்தப்பட்ட தரமான சாலைகளை அமைத்துள்ளேன். இதேபோல் தொகுதி முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். மீண்டும் என்னை சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்தால் கொள்ளிடத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா மற்றும் தீயணைப்பு நிலையம் கொண்டுவர பாடுபடுவேன். அதேபோல் திருமுல்லைவாசல் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க பாடுபடுவேன். பல்வேறு நலத்திட்டங்களை தொகுதி முழுவதும் செய்திட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

திறந்த வாகனத்தில்...
அவருடன் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர் செல்லையன், தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் நாடிமுத்து, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் மாமல்லன், ஒன்றிய நிர்வாகிகள் திருமாறன், மனோகரன், நடராஜன், பா.ஜ.க. மாவட்ட அரசு அலுவலர் சங்க பொறுப்பாளர் துரை செழியன், ஒன்றிய பா.ஜ.க. தலைவர் அருள் ராஜன், பா.ஜ.க. பிரமுகர் சுப்பிரவேல், சீர்காழி பா.ம.க. ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜான்சிராணி சுப்பிரமணியன், மல்லிகா பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிறுவன நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.  இதனை தொடர்ந்து மணிக்கிராமம், ராதாநல்லூர், செம்பதனிருப்பு காத்திருப்பு உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் செய்திகள்