பிரபல ரவுடி பிரவீன்நாத் அடித்துக்கொலை: இறுதி ஊர்வலத்தின் போது கடைகள்,மோட்டார் சைக்கிள்கள் சூறை

பிரபல ரவுடி பிரவீன்நாத் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடைய இறுதி ஊர்வலத்தின் போது கடைகள், மோட்டார் சைக்கிள்கள் சூறையாடப்பட்டன.

Update: 2021-03-28 02:30 GMT

கொள்ளிடம் டோல்கேட், 

பிரபல ரவுடி பிரவீன்நாத் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடைய இறுதி ஊர்வலத்தின் போது கடைகள், மோட்டார் சைக்கிள்கள் சூறையாடப்பட்டன.

ரவுடி அடித்துக்கொலை

திருச்சி மாவட்டம் முசிறி காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிரவீன்நாத் (வயது 32).நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 7 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 7 பேரை கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் பிரவீன்நாத்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்ததும், உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரவீன்நாத் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு இறுதி சடங்கிற்காக கொண்டுசெல்லப்பட்டது.

இறுதி ஊர்வலம்

அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து பிரவீன்நாத் கூட்டாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றனர். நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வந்தபோது பிரவீன்நாத் அடித்துக்கொலை செய்யப்பட்ட இடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது ஆத்திரமடைந்த பிரவீன்நாத் கூட்டாளிகள் அருகிலிருந்த தின்பண்டம் விற்பனை கடை, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், காய்கறி கடைகள், பழக்கடை, தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி சூறையாடி, ரகளையில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்