திருச்சி சோதனைச்சாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் ரூ.24¼ லட்சம் பறிமுதல் பறக்கும்படை நடவடிக்கை

திருச்சி சோதனைச்சாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் இருந்து ரூ.24¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-28 01:13 GMT
திருச்சி, 

திருச்சி சோதனைச்சாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் இருந்து ரூ.24¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறக்கும் படை வாகன தணிக்கை

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தொகுதி வாரியாக ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.

பெட்டவாய்த்தலையில் இதுவரை இல்லாத அளவில் அதிக தொகையாக ரூ.1 கோடி சிக்கியது. இதுதொடர்பாக முறையான விசாரணை செய்யப்படாததால் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, சப்-கலெக்டர் ஆகிய 3 பேரையும் அதிரடியாக தேர்தல் இல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

ரூ.24¼ லட்சம் சிக்கியது

இந்த நிலையில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உறையூர் லிங்கம் நகர் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வனஜா தலைமையிலான அதிகாரிகள் குழு வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த லிங்கம் நகரை சேர்ந்த சீனிவாசனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அவர் வைத்திருந்த பையில் ரூ.24¼ லட்சம் எடுத்துச்செல்வது தெரியவந்தது. விசாரணையில், பழூர் வங்கி ஒன்றில் இருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக எடுத்து செல்லும் பணம் என்று தெரிவித்தார்.

 ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர், திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆர்.டி.ஓ. விசுவநாதன், திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் அவை எண்ணப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்