திருச்சி அருகே மதுபோதையில் தகராறு: பிரபல ரவுடி கட்டையால் அடித்துக்கொலை; 7 பேர் கைது
திருச்சி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அருகே மதுபோதையில் தகராறு:
பிரபல ரவுடி கட்டையால் அடித்துக்கொலை
7 பேர் கைது
கொள்ளிடம் டோல்கேட், மார்ச்.28-
திருச்சி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பிரபல ரவுடி
திருச்சி மாவட்டம் முசிறி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருடைய மகன் பிரவீன்நாத் (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவருடைய மனைவி அகிலா(29). இவர்களுக்கு ஆதித்யா (2) என்ற மகன் உள்ளான். பிரவீன்நாத் தற்போது லால்குடி தாலுகா இடையாற்றுமங்கலம், காமராஜர்தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நண்பர்களுடன் சுற்றுலா
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிரவீன்நாத் தனது மனைவியின் உறவினரான லால்குடி ஆங்கரை பகுதியை சேர்ந்த ஜான்போஸ்கோ (30), பெரம்பலூர் பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவர் ஆகிய இரண்டு பேருடன் கேரளாவிற்கு சுற்றுலா செல்வதற்காக வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
திருச்சி அருகே நெ.1டோல்கேட் பகுதிக்கு வந்ததும் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காரை நிறுத்தினர். டாஸ்மாக் கடை அடைத்து இருந்ததால், அப்பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பவர்களிடம், மது வாங்கி பிரவீன்நாத்தும், அவருடைய நண்பர்களும் காரில் அமர்ந்து மதுகுடித்துக்கொண்டிருந்தனர்.
மதுபோதையில் தகராறு
அப்போது, உத்தமர்கோவில் அருகே உள்ள பீரங்கி மேட்டுத்தெருவை சேர்ந்த ராஜா (36), கவுதம் (28) ஆகியோர் அங்கு மது வாங்க வந்தனர். அவர்கள் 2 பேரையும் மதுபோதையில் இருந்த பிரவீன்நாத் உள்ளிட்ட 3 பேரும் வழிமறித்து நீங்கள் யார்?, இங்கு உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் இருவரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, கவுதம் தனது அண்ணன் கார்த்திக்கு (31) செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனே அவர், தனது நண்பர்களான முத்துக்கிருஷ்ணன்(26), மகேஷ்(27), மற்றொரு ராஜா(28), முரளி(27) ஆகியோருடன் அங்கு விரைந்து வந்தார். அவர்கள் பிரவீன்நாத் வந்த காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதுடன், பிரவீன்நாத் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேரையும் கடுமையாக தாக்க ஆரம்பித்தனர்.
அடித்துக்கொலை
இதனால் பயந்துபோன அவர்கள் அங்கிருந்து ஆளுக்கொரு திசையில் தப்பி ஓடினர். அப்போது, ஆத்திரமடைந்த ராஜா, கவுதம் உள்ளிட்ட 7 பேரும் அங்கிருந்த விறகு கட்டையால் பிரவீன்நாத்தை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த பிரவீன்நாத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த 7 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
7 பேர் கைது
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் நெ.1டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், கொலையான பிரவீன்நாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ராஜா, கவுதம், கார்த்திக் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.