ஈரோடு மாவட்டத்தில் தபால் ஓட்டு போட முதியவர்கள் உள்பட 5,435 பேர் விண்ணப்பம்; இன்று வாக்குப்பதிவு தொடங்குகிறது
ஈரோடு மாவட்டத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு முதியவர்கள் உள்பட 5 ஆயிரத்து 435 பேர் விண்ணப்பம் அளித்து உள்ளனர். அவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு தொடங்குகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு முதியவர்கள் உள்பட 5 ஆயிரத்து 435 பேர் விண்ணப்பம் அளித்து உள்ளனர். அவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தபால் ஓட்டுப்பதிவு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று ஓட்டுப்போட முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் ஓட்டு அளிக்கலாம் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 62 பேரும், மாற்றுத்திறனாளிகள் 14 ஆயிரத்து 597 பேரும் உள்ளனர்.
இதில் தபால் ஓட்டு போடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள், 12டி படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 4 ஆயிரத்து 413 பேரும், 1,022 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 435 வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 324 பேரும், ஈரோடு மேற்கு தொகுதியில் 756 பேரும், மொடக்குறிச்சியில் 1,097 பேரும், பெருந்துறையில் 1,038 பேரும், பவானியில் 640 பேரும், அந்தியூரில் 341 பேரும், கோபியில் 967 பேரும், பவானிசாகரில் 272 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.
இன்று தொடங்குகிறது
இவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. எனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு சேகரிக்கும் குழுவினர் தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுகளை பெற உள்ளார்கள். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பணிகள் நடைபெறுகிறது. அப்போது தபால் ஓட்டு போட உள்ள வாக்காளர்களிடம் தபால் ஓட்டுச்சீட்டு வழங்கப்படும்.
இந்த வாக்கு சேகரிக்கும் குழுவில் மண்டல அதிகாரி கண்காணிப்பாளராகவும், 2 வாக்கு சேகரிக்கும் அலுவலா்கள், நுண்கண்காணிப்பு அலுவலா், வீடியோ பதிவு செய்பவர், சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அதிகாரி மற்றும் ஆயுதம் ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் உடன் இருப்பார்கள் என்றும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்களிக்க முடியாதவர்களுக்கு 31-ந் தேதி வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோட்டில் தபால் ஓட்டுகளை பெறுவதற்கான ஓட்டுப்பெட்டிகள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு சீட்டுகளை பிரித்து கவர்களில் தனித்தனியாக எடுத்து வைக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டார்கள்.