ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் தற்கொலை
ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓமலூர்:
ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டாக்டர் தம்பதி
ஓமலூரை அடுத்த சக்கரைசெட்டிபட்டி நாலுகால் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சக்கரைசெட்டி பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 38), இவர் சேலம் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுதா (35) என்பவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுஜித் (7), சுஜிதா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் சுதா டாக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
குறுஞ்செய்தி
இந்த நிலையில் டாக்டர் தம்பதிகளான பாலகிருஷ்ணன், சுதா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களாக டாக்டர் சுதா ஓமலூர் காமராஜர் நகரில் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.
இதனிடையே நேற்றுமுன்தினம் நள்ளிரவு டாக்டர் சுதா தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது சகோதரி மற்றும் பெற்றோர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுதாவின் பெற்றோர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தற்கொலை
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மேலும் டாக்டர் சுதாவின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தபோது, ஒரு அறையில் மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு சுதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அதே அறையில் குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். தொடர்ந்து போலீசார் டாக்டர் சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குழந்தைகள் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.
தொடர்ந்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு டாக்டர் சுதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.