தேர்தல் பணியில் ஈடுபடும் 15,441 அரசு பணியாளர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்

தேர்தல் பணியில் ஈடுபடும் 15,441 அரசு பணியாளர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சியினை கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-03-27 21:43 GMT
திருச்சி, 
தேர்தல் பணியில் ஈடுபடும் 15,441 அரசு பணியாளர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சியினை கலெக்டர் திவ்யதர்ஷினி நேரில் ஆய்வு செய்தார்.

2-ம் கட்ட பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்கு 15,441 அரசு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 2-ம் கட்ட பயிற்சி நேற்று தொடங்கியது. அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான விதிமுறை குறித்து 9 இடங்களில் நடைபெறுகிறது. திருச்சி தேசிய கல்லூரி மற்றும் ஹோலிகிராஸ் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான எஸ்.திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

ஹோலிகிராஸ் கல்லூரியில் 2-ம் நிலை பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்ததுடன் 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். பின்னர் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுரை வழங்கி பேசியதாவது:-

தபால் வாக்கு

வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள், முதல் நிலை அலுவலர்கள், இரண்டாம் நிலை அலுவலர்கள், மூன்றாம் நிலை அலுவலர்கள் என மொத்தம் 15,144 நபர்களுக்கு 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்கு செலுத்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவம் அணிந்தும் தபால் வாக்கு அளித்து வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பூசி

2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தேர்தல் பயிற்சி அளிக்கப்படும் இடங்களிலேயே கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு இலவசமாக போடப்படுகிறது. இந்த வாய்ப்பை தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்குரிய தபால் வாக்குப்பதிவு மையங்களில் பெறப்பட்ட வாக்குகளை வாக்குப்பதிவு முடிவுற்றபின் மாவட்டத்தின்பிற சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைத்திட ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவர் பழனிகுமார், பயிற்சி கலெக்டர் சித்ராவிஜயன், துணை கலெக்டர் (பயிற்சி) பவித்ரா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்