ஈரோட்டில் செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாடிய சிறுவன் தற்கொலை

ஈரோட்டில் செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாடிய சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2021-03-27 21:38 GMT
ஈரோடு
ஈரோட்டில் செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாடிய சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
“பிரிபயர்” விளையாட்டு
ஈரோடு ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி பூமணி. இவர்களுடைய மகன்கள் மணிகண்டன், மகேந்திரன், மனோஜ்குமார் (வயது 17) மற்றும் மகள் அபிநயா. இதில் மனோஜ்குமார் 10-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த 1½ ஆண்டாக வீட்டில் இருந்து வந்தார். அவர் செல்போனில் “பிரிபயர்” என்ற வீடியோ கேமை அடிக்கடி விளையாடி கொண்டே இருந்தார். இதனால் பெரும்பாலான நேரங்களில் விளையாட்டிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலையில் ஜெகநாதனும், அவரது மனைவியும் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். மணிகண்டனும், மகேந்திரனும் வெளியில் சென்றார்கள்.    இதனால் மனோஜ்குமாரும், அபிநயாவும் வீட்டில் இருந்தனர். மாலையில் அபிநயா பக்கத்து வீட்டுக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பினார். அப்போது வீட்டிற்குள் மனோஜ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ் விசாரணை
அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மனோஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், செல்போனில் அடிக்கடி “பிரிபயர்” விளையாடி வந்த மனோஜ்குமார், அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்