முளைப்பாரி ஊர்வலம்
திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி வடக்குத்தி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திருவேங்கடம், மார்ச்:
திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி மேலத்தெருவில் உள்ள வடக்குத்தி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கலிட்டும் வழிபட்டனர். இரவில் அம்மன் பூச்சப்பரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து ஆண்கள், பெண்கள் முளைப்பாரி வளர்த்து கும்மியடித்து வழிபட்டனர். பின்னர் முளைப்பாரி வடக்குத்தி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கலிங்கப்பட்டி பெரியகுளம் கண்மாயில் கரைக்கப்பட்டது. மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிவுற்றது. இதேபோல் கலிங்கப்பட்டி அருகே பிள்ளையார்குளத்தில் முத்துவீரப்ப சாமி பங்குனி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.