4 முறை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு

காட்டுமன்னார்கோவில் பகுதியில் 4 முறை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதற்கான காரணம் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-03-27 20:34 GMT
காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று காலை 8.30 மணி அளவில் குண்டு வெடித்தது போன்று பலத்த சத்தம் கேட்டது. இதேபோன்று அடுத்தடுத்து தொடர்ந்து 3 முறை குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை, கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் கேட்டுள்ளது. 
இந்த சத்தத்தை கேட்டு பொதுமக்கள் மட்டுமல்லாமல் போலீசாரும், அரசு அதிகாரிகளும் பயங்கர அதிர்ச்சி அடைந்தனர். திடீரென்று கேட்ட சத்தத்தால் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதோ என்று அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். 

பொதுமக்கள் பீதி 

பலத்த சத்தத்தை கேட்டதும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வீதிக்கு ஓடி வந்தனர். இதனால் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் பீதிக்கு ஆளாகினர். இந்த சத்தத்தால் காட்டுமன்னார்கோவில் பகுதி முழுவதும் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதற்கிடையில் இந்த சத்தம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கோணங்களில் வதந்தி பரவியது. இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.  

காரணம் என்ன?

விசாரணையில், மயிலாடுதுறை அருகே உள்ள மறையூர் கிராமத்தில் இருந்து அந்த சத்தம் கேட்டது தெரிய வந்தது. இதனையடுத்து மயிலாடுதுறை தாசில்தார் பிரான்சுவா மறையூர் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறை அருகே மறையூர் ஊராட்சி கோவங்குடி கிராமத்தில் நீர் நிரம்பிய சின்னக்குளத்தின் மேலே நேற்று காலை 8.30 மணி அளவில் ராணுவ பயிற்சி விமானம் தாழ்வாக பறந்துள்ளது. அப்போது பயிற்சி விமானத்தில் ‘ஏர்லாக்’ கிளீயர் செய்வதற்காக சின்னக்குளத்தின் மேலே காற்றை திறந்து விட்டுள்ளனர். அவ்வாறு காற்றை திறந்து விடும்போது இவ்வாறு அதிர்வுடன் கூடிய சத்தம் வந்துள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்