வள்ளத்தில் கருப்பு கொடி கட்டி கடலில் பொதுமக்கள் போராட்டம்

சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ளத்தில் கருப்பு கொடி கட்டி கடலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கீழ மணக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-27 20:18 GMT
தென்தாமரைகுளம்,
சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ளத்தில் கருப்பு கொடி கட்டி கடலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கீழ மணக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
சரக்கு பெட்டக துறைமுகம்
கடந்த 2017-ம் ஆண்டு கோவளம் மற்றும் கீழமணக்குடிக்கு இடைப்பட்ட பகுதியில் ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடலோர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று கூறி பலவிதமான ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பொதுமக்களின் எதிர்ப்பால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைமை பொறியாளர் வெளியிட்ட அறிவிப்பில், கன்னியாகுமரி அருகே பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் (பிபிபி) கூடிய திட்டம் தொடங்க இருக்கிறது. அதற்கு 65 லட்சம் கன்டெய்னர்களை கையாளும் பசுமை துறைமுகம் அல்லது டிரான்ஷிப்மென்ட் ஹப் அமைத்தல் பணிகளுக்கு துறைமுக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மீனவ மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்-அமைச்சர் அறிவிப்பு
தூத்துக்குடி துறைமுகம் சார்பில் வெளிவந்த இந்த அறிவிப்பை பார்த்து மீண்டும் கடலோர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரோக்கிய புரத்திலிருந்து நீரோடி வரை உள்ள 46 கடற்கரை கிராம மக்களும் தங்களுடைய தேவாலயத்தின் முன்பு கூடி நின்று துறைமுக திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்துக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என்று அறிவித்தார்.
கீழமணக்குடி
இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று கீழமணக்குடி புனித அந்தோணியார் குருசடி அருகில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் கடல்வழியாகவும், தரை வழியாகவும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்திற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தலைமை தாங்கினார். துறைமுக எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பிரபா பெர்னாண்டோ முன்னிலை வகித்தார். பங்குதந்தை ஸ்டீபன் தொடக்க உரையாற்றினார். குமரி சமூக விடியல் இயக்க நிறுவனர் பங்குத்தந்தை ராஜன், சாமிதோப்பு அன்புவன நிறுவனர் பால.பிரஜாபதி அடிகளார் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் துறைமுகம் வேண்டாம் வேண்டாம் என்று பொதுமக்கள் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் துறைமுகம் வந்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் கீழமணக்குடியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பேசினார்கள். எதிர்ப்பு குழு செயலாளர் வெனிஸ் விழிப்புணர்வு பாடல்களை பாடினார். ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ். பார்த்தசாரதி நன்றி கூறினார்.
கூட்டத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் இந்த மாவட்டத்தில் சரக்கு பெட்டக முனையம் அமைக்க மாட்டோம் என்று அதிகாரப்பூர்வமான பொது அறிவிப்பை பொதுமக்களிடம் வெளியிடவேண்டும். அதுவரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மீனவ கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்
கடல் வழி போராட்டம்
சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர கிராம மக்கள் சுமார் 200 படகு மற்றும் வள்ளங்களில் கருப்பு கொடி கட்டி கடலுக்குள் கீழ மணக்குடியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். 
இதற்காக நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கிராமத்திலிருந்து குளச்சல் வரையுள்ள கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் வழியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதில் அகில இந்திய விவசாய சங்க தலைவர் அசோக் தவாலே, பஞ்சாப் மாநில விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் கன்வய்பிரிட் சிங் போன்று, தேசிய மீன் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஓலன்சியோ சைமஸ், துறைமுக எதிர்ப்பு குழுவை சேர்ந்த பங்கு தந்தை ஜோசப் ரொமான்ஸ், தாமஸ் பிராங்கோ, நாஞ்சில் மைக்கேல், மரியதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்