சந்தர்ப்பவாத கூட்டணி அ.தி.மு.க.
தி.மு.க. கூட்டணி கொள்கைக்காக உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று நாகூரில், கனிமொழி எம்.பி. கூறினார்.
நாகப்பட்டினம்:
தி.மு.க. கூட்டணி கொள்கைக்காக உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று நாகூரில், கனிமொழி எம்.பி. கூறினார்.
கனிமொழி எம்.பி. பிரசாரம்
நாகை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ஷாநவாசை ஆதரித்து நாகூர் புதிய பஸ் நிலையத்தில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜ.க. சூழ்ச்சி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கொள்கைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. அடித்தட்டு மக்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்கள் நலனுக்கு எதிராகவும் மத்திய அரசு சட்டங்களை இயற்றி வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவும், சகோதர, சகோதரிகளாக வாழ்பவர்களை பிரிப்பதற்காகவும் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜாதி, மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் நம்மை பிரிக்க பா.ஜ.க. சூழ்ச்சி செய்து வருகிறது.
ஏழை, எளிய மக்கள் படிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக்கல்லுாரிகளை ஏற்படுத்தி தந்தவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால் அங்கு படிக்க முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் மத்திய அரசு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு அ.தி.மு.க. அரசு ஆதரவு கொடுக்கிறது.
சந்தர்ப்பவாத கூட்டணி
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தேர்தலுக்காக ஏற்படுத்திய கூட்டணி. மக்கள் நலனுக்கு எதிரான கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க. வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவுன்சிலர் ஆவதற்கு கூட லாயக்கற்றவர் என்றார். ஆனால் இன்று அவர்களும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். இது தேர்தலுக்காக உருவான சந்தர்ப்பவாத கூட்டணி.
தமிழர்களின் உரிமை, மொழி, அடையாளம் ஆகியவற்றை பா.ஜ.க.விடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார். முதல்-அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் எதையும் செய்வார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் என்ன பாம்பா... பல்லியா ஊர்ந்து செல்வதற்கு என்கிறார். முதல்-அமைச்சர் ஆவதற்கு முன்பு யார் காலில் விழுந்து வணங்கினாரோ அவரது காலையே வாரி விட்டு விட்டார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை விதித்து அனைத்து தொழில்களையும் நாசமாக்கி விட்டது. ஆனால் இதை எதிர்த்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் பேசக்கூட முடியவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக நாங்கள் இருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அப்படி இருந்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை ஏன் கேட்டு பெற முடியவில்லை?. தமிழகத்தில் இயற்கை சீற்றம் ஏற்படும்போது, தேவைப்படும் தொகையை மத்திய அரசிடம் இருந்து ஏன் கேட்டுப்பெற முடியவில்லை. தமிழகத்தை அடகு வைத்து பா.ஜ.க.வுடன் கூட்டணி தேவையா?.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு உதாரணமான பொள்ளாச்சி சம்பவத்தை மறக்க முடியாது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
சுற்றுலாதலமாக்கப்படும்
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும். அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்கு தளம் நவீனப்படுத்தப்படும். எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ஷாநவாசுக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
கீழ்வேளூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் நாகை மாலிக்கு ஆதரவாக மேலப்பிடாகை, திருக்குவளை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் கனிமொழி வாக்கு சேகரித்தார்.