முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை சேகரிக்க 32 குழுக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை சேகரிக்க 32 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல்:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் இருக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தபால் வாக்கு அளிக்க விரும்பும் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை சேகரிப்பதற்கு மாநிலம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 37 ஆயிரம் பேரிடம் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று விருப்பத்தை கேட்டு அறிந்தனர்.
32 குழுக்கள்
அதில் 1,854 முதியவர்கள் மற்றும் 781 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 635 பேர் தபால் வாக்கு செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்தனர். எனவே, அந்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை சேகரிப்பதற்கு மாவட்டம் முழுவதும் மொத்தம் 32 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த குழுவில் 2 தேர்தல் அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர், ஒரு போலீஸ்காரர், ஒரு வீடியோகேமராமேன் ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த முதியோர், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து தபால் வாக்குச்சீட்டுகளை கொடுப்பார்கள். பின்னர் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவதை வீடியோ கேமராவில் பதிவு செய்வார்கள். அதையடுத்து தபால் வாக்குகள் சேகரிக்கப்படும். இந்த பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.