கூடலூர் அருகே மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த லாரி
கூடலூர் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.
கூடலூர்:
கம்பம் மவுலானா முகமது அலி ஜின்னா தெருவை சேர்ந்தவர் அப்துல்சமது (வயது 46). லாரி டிரைவர். இவர் சென்னை தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு லாரியில் பொருட்கள் ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் லாரியில் ரப்பர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, கோட்டயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் என்ற இடத்தில் அந்த லாரி வந்தபோது திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் சுதாரித்து கொண்ட அப்துல்சமது, லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார். இதனால் அவர் உயிர் தப்பினார். இதற்கிடையே லாரியில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களுடன் சேர்ந்து லாரியில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு, லாரியை சாலையோரமாக நிறுத்தியதால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.