கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து தொகுதி மக்களின் குறை தீர்ப்பேன்; கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் வாக்குறுதி
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து தொகுதி மக்களின் குறை தீர்ப்பேன் என கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் வாக்குறுதி அளித்தார்.
வாக்கு சேகரிப்பு
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று தொகுதியில் பொது மக்களை சந்தித்து பெரியவர்கள் பாதம் தொட்டு வேண்டி வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தொகுதிக்கு உட்பட்ட என்னை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து சட்டசபைக்கு தங்கள் ஆசீர்வாதத்தோடு அனுப்ப வேண்டும் என்று பாதம் தொட்டு வேண்டுகிறேன். சட்டமன்ற உறுப்பினரானதும் தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்துவேன். தொகுதிக்குள்ளேயே நான் வசித்து வருவதால் பொதுமக்கள் குறை என்று சொன்னால் கூப்பிட்ட குரலுக்கு அடுத்த சில நிமிடங்களில் தங்கள் முன் ஓடிவந்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
நலத்திட்டங்கள்
வெற்றி பெற்றதும் அனைத்து இடங்களிலும் தேவையான அனைத்து நலத்திட்டங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமாரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.