மயிலாடுதுறை அருகே மணல்மேடு-கொள்ளிடம் உயர்மட்ட பாலத்திற்கான அணுகுசாலையை அமைப்பேன்; காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் உறுதி

மயிலாடுதுறை அருகே மணல்மேடு-கொள்ளிடம் உயர்மட்ட பாலத்திற்கான அணுகுசாலையை அமைப்பேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் உறுதி அளித்துள்ளார்.

Update: 2021-03-27 02:30 GMT
வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை சட்டசபை தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் நேற்று திருவிழுந்தூர் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார். அப்போது சாந்துகாப்பு பகுதியில் வேட்பாளர் ராஜகுமாருக்கு அந்த பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 2006-2011-ம் ஆண்டு நான் சட்டசபை உறுப்பினராக இருந்தபோது, மயிலாடுதுறை மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் மணல்மேடு-முட்டம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.49 கோடியில் உயர்மட்ட பாலம் 
கட்டப்பட்டது. அப்போது நான் முன்னின்று அணுகு சாலை அமைப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்தேன். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், அணுகு சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் மணல்மேட்டில் இருந்து குறுகிய சாலையில் சென்று கொள்ளிடம் பாலத்தை கடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

அணுகு சாலை
இதன் காரணமாக கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்ல முடியவில்லை. எந்த நோக்கத்திற்காக கொள்ளிடம் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. நான் மீண்டும் எம்.எல்.ஏ., ஆனவுடன் கிடப்பில் போடப்பட்ட அந்த கொள்ளிடம் உயர்மட்ட பாலத்திற்கான அணுகு சாலையை உடனே அமைத்திட உரிய நடவடிக்கை எடுப்பேன். இதேபோல கைவிடப்பட்ட வளர்ச்சி் திட்டங்களையும், புதிய வளர்ச்சி் பணிகளையும் மயிலாடுதுறை பகுதிக்கு கொண்டுவர பாடுபடுவேன் என்றார்.

மேலும் செய்திகள்